தமிழ் இலக்கண மின்னிலக்கக் களஞ்சியம் வெளியீடு
தமிழாசிரியர் தம் தமிழ் இலக்கண அறிவை ஆழப்படுத்துவதற்கும் தன்னிச்சையான கற்றலில் ஈடுபடுவதற்கும் இத்தளம் வழிகாட்டியாக விளங்கும்.
சோலையின் இதமான காற்றும் ஆங்கே காணப்படும் பல்வகை மரஞ்செடிகொடிகளின் வனப்பும் மணமுள்ள வண்ணப் பூக்களும் நம் உள்ளத்தைச் சுண்டியிழுப்பதுபோல, இத்தளத்திலுள்ள ஒளிக்காட்சிகள் மரபிலக்கணத்துக்கு முதன்மை கொடுத்தாலும் இக்காலத் தமிழ்மொழிப் பயன்பாட்டில் காணப்படும் மாற்றங்கள், அறிவியல் அடிப்படையில் எடுத்துரைக்கப்படும் மொழியியல் கூறுகள், பிற இணைப்புகள், ஒளிக்காட்சிகள் முதலியவற்றைப் பன்முகநோக்குடன் வழங்குகிறது. ஆதலால், இந்நூல் தமிழ் இலக்கண மின்-சோலை என்று பெயரிடப்பட்டுள்ளது
பாடத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவு பரிந்துரைத்துள்ள தமிழ் இலக்கணத் தலைப்புகளோடு பிற இலக்கணத் தலைப்புகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. இலக்கணத் தலைப்புகள் மரபுநிலை வைப்புமுறையில் தொகுக்கப்படாமல் ஒருங்கிணைந்த முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. ஏனெனில், இம்முறையின்வழித் தமிழாசிரியர்கள் தமிழ் இலக்கணத்தின் ஆழத்தை இலகுவாகப் புரிந்துகொள்ளவும் கற்றலைத் தொடர்புபடுத்தவும் இயலும். இத்தொகுப்பு, தமிழாசிரியர்கள் தமிழ் இலக்கணத்தை எளிமையாகவும் இனிமையாகவும் பயன்பாட்டளவிலும் கற்றுக்கொள்வதற்குரிய வளமையாக அமையும்.
இந்நூல் தயாரிப்புக்கு நல்லாதரவும் யோசனைகளையும் வழங்கிய தமிழ் இலக்கண ஆலோசகர் குழுவிற்கும் தமிழ் இலக்கணப் பணிக்குழு உறுப்பினர்களுக்கும் தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகத்தின் சார்பில் எங்கள் நன்றி உரித்தாகுக.